டொவினோ தாமஸின் 50வது படமாக, ‘ஏஆர்எம்’ என்ற ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ என்ற பான் இந்தியா படம் வந்திருக்கிறது. கேரளாவிலுள்ள சியோத்திக்காவ் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் அஜயன் (டொவினோ தாமஸ்), லஷ்மியை (கிரித்தி ஷெட்டி) காதலிக்கிறார். ஒருகாலத்தில் அங்குள்ள கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, விண்கல் மற்றும் சில உலோகங்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீபூதி என்ற விளக்கை திருடிய அஜயனின் தாத்தா மணியனின் (டொவினோ தாமஸ்) செயலால் ஏற்பட்ட அவப்பெயரால், அஜயனின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. அதை நினைத்து அவரது தாய் ரோகிணி கலங்குகிறார்.
இந்நிலையில், கிரித்தி ஷெட்டியின் தந்தைக்கு அஜயனின் காதல் விவகாரம் தெரிந்து, அவரை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார். அப்போது அங்கு வரும் ஹரீஷ் உத்தமன், பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தும் பேராற்றல் கொண்ட ஸ்ரீபூதி விளக்கை கண்டுபிடித்து தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று அஜயனை மிரட்டுகிறார். அவருக்கு ஏன் விளக்கு வேண்டும்? தாத்தாவால் ஏற்பட்ட அவப்பெயரை பேரன் போக்கினாரா? அஜயன், லஷ்மி காதல் நிறைவேறியதா என்பது மீதி கதை.
மாறுபட்ட கேரக்டர்களில் தனது இருப்பை ஆழமாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தும் டொவினோ தாமஸுக்கு இப்படம் ஒரு மைல் கல். ரோகிணி, பசில் ஜோசப் உள்பட பலர் இயல்பாக நடித்துள்ளனர். கிரித்தி ஷெட்டி அழகாக இருக்கிறார். ‘நடிக்க’ வாய்ப்பு குறைவு. அவருக்கும், அஜயனுக்குமான காதலும், முத்தமும், தழுவலும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு காட்சியில் வந்து போகிறார்.
ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான், ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், விஎஃப்எக்ஸ் வடிவமைப்பாளர், எடிட்டர் ஆகியோரின் கூட்டணி கலக்கியிருக்கிறது. பீரியட் பிலிம் மற்றும் நிகழ்கால கதை என்பதால், சுஜித் நம்பியார் இன்னும் வித்தியாசமாக யோசித்திருக்கலாம். அடுத்து நடப்பதை முன்பே கணிக்க முடிவது மைனஸ். திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள், பின்னணி இசை சிறப்பு. ஜித்தின் லால் இயக்கியுள்ளார். ரசிகர்களை அசத்த சாகசத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்.