சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழ் திரை உலகின் சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக தமிழ் திரை உலகின் அனைத்து சங்க நிர்வாகிகள் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழ் திரை உலகிற்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார். தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளித்தார். தரமான படங்களுக்கு மானியம் தந்தார். திரைப்பட நகரம் அமைக்க பையனூரில் 100 ஏக்கர் இடம் தந்தார். படப்பிடிப்பு கட்டணங்களை குறைத்தார். படப்பிடிப்பு அனுமதிக்கு சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வந்தார்.
இது மட்டுமல்லாது 75 படங்கள் மூலம் திரைப்படத்துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தார். பகுத்தறிவு, சமூக நீதி பெண் உரிமையை தனது படங்கள் மூலம் மக்களுக்கு வழங்கினார். கலைஞர் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு முழுமையான கலைஞராக வாழ்ந்ததால் அவரது நூற்றாண்டு விழாவை நாங்கள் கொண்டாடுவது பொருத்தமானது. ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற டிசம்பர் 24ம் தேதி நடக்கிறது. மாலை 4 மணிக்கு தொடங்கும் விழா இரவு 9 மணி வரை நடக்கிறது.
இந்திய திரை உலகினர் கலந்து கொள்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மராத்தி உள்ளிட்ட அனைத்து மொழி கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். இந்த விழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகிறது.இந்த விழாவில் 20 விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்காக 150 உதவி இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள், நடிகர், நடிகைகள் பணியாற்றி வருகிறார்கள்.
கலைஞரின் படங்களில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகளை திரைப்பட நடிகர், நடிகைகள் நேரடியாக நடித்துக் காட்ட இருக்கிறார்கள். கமல், ரஜினி, இளையராஜா இணைந்து நடத்தும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. கலைஞர் நூற்றாண்டை கௌரவிக்கும் வகையில் அனைத்து இசையமைப்பாளர்கள் பாடகர், பாடகிகள் இணைந்து உருவாக்கும் ஆல்பம் வெளியிடப்படுகிறது. கலைஞர் குறித்த புகைப்பட கண்காட்சி நடக்கிறது. கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் திரைப்பட நிகழ்ச்சி இதுவாகும்.
விழாவில் 40 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் கலந்து கொள்ள வருமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சந்திப்பின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் சவுந்தர பாண்டியன், பொருளாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், பெப்சி தலைவர் ஆர். கே.செல்வமணி, நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகை லதா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் சங்க பொருளாளர் பேரரசு, நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா, பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன், பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன் உள்பட அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.