தொடர்ச்சியாக நடக்கும் திடீர், திடீர் தற்கொலைகளின் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை அறிந்த போலீஸ் அதிகாரி ஷாம், அந்த வழக்குகளை விசாரிக்க தானாக முன்வருகிறார். அவருக்கு உயர் அதிகாரி அருள் டி.சங்கர் பெர்மிஷன் கொடுக்கிறார். கான்ஸ்டபிள் ஒருவரின் உதவியுடன் விசாரணையை தொடங்கிய ஷாமுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அப்போது அவரை சந்திக்கும் கல்லூரி நண்பர் ஒருவர், ஷாம் விசாரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் குறித்த தகவல்களை சொல்கிறார். பிறகு அவரும், அவரை தேடி வரும் இன்னொருவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இதனால் டென்ஷனான உயர் அதிகாரி, அந்த வழக்குகளில் இருந்து ஷாமை விடுவித்து, அவரை கட்டாய விடுமுறையில் அனுப்புகிறார். பணியில் இல்லாத நிலையிலும் தைரியமாக வெளியே வரும் ஷாம், சில உண்மைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றிபெற்றாரா என்பது மீதி கதை. கம்பீரமான போலீஸ் கேரக்டரில் ஷாம் சிறப்பாக நடித்துள்ளார். அவர் விசாரிக்கும் தொனி அதிக பதற்றத்தை ஏற்படுத்துகிறது. குழந்தை இல்லாத தனது மனைவி நிராவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, தனியாக வருந்தும் காட்சியில் உருக வைக்கிறார். நிராவுக்கு அதிக வேலை இல்லை. கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்தவர் மற்றும் மனநல மருத்துவர் நிழல்கள் ரவி, உயர் அதிகாரி அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்ட்டின் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.
முழுநீள கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஏற்ப, காட்சிகளை விறுவிறுப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் கல்யாண் வெங்கட்ராமன். கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை மிரட்டி இருக்கிறது. விசாரணை காட்சிகளை மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கியுள்ளார், எடிட்டர் பூபதி. கடந்த காலத்தில் நடந்த ஜப்பான் மன்னரின் சம்பவத்தை மையப்படுத்தி, படத்தை அரவிந்த் ராஜகோபால் சிறப்பாக எழுதி இயக்கியுள்ளார். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதை பெரிய பலம். வில்லனே துப்பு கொடுப்பது அசத்தல். மீண்டும், மீண்டும் சொல்லப்படும் ஜப்பான் மன்னரை பற்றிய சம்பவத்தை குறைத்திருக்கலாம்.