சென்னை,: எஸ்.அம்பேத்குமாரின் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்க, நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ள படம், ‘டிஎன்ஏ’. இப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், ‘D என்ற திவ்யா, A என்ற ஆனந்த் பற்றிய ஸ்கிரிப்ட், 2009ல் இருந்து என்னிடம் இருந்தது. அவர்கள் இப்போதும் இருக்கின்றனர்.
பெயர்கள் மட்டும் வேறு. அந்த உண்மையான ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’ என்றார். நிமிஷா சஜயன் பேசும்போது, ‘இந்த படம் ஹிட்டாகுமா, ஹிட்டாகாதா என்ற பதட்டம் இருந்தது. சிறப்புக்காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனங்களை தொடர்ந்து, படம் ரிலீசான பிறகு பதட்டம் இல்லாமல் நிம்மதியாக தூங்கினேன். இதில் நான் சிறப்பாக நடித்ததாக சொன்னால், அந்த கிரெடிட் இயக்குனரையே சேரும்.
எப்போதும் போல் நான் இயக்குனரின் ஹீரோயினாக இருக்க விரும்புகிறேன். அதர்வா அதிக திறமைசாலி. அவருடைய ஆதரவு இல்லை என்றால் இந்த திவ்யா இல்லை’ என்றார். அதர்வா முரளி பேசுகையில், ‘டிஎன்ஏ படம் என்னால் மறக்கவே முடியாத படம். ரசிகர்களின் வரவேற்பை நேரில் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றபோது, வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு பாராட்டினார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்த தருணத்தில் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை உணர்கிறேன்’ என்றார்.