Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் ‘நிறம்’: டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு !

ஸ்குவார் சினிமாஸ் சார்பில் கே. பிந்து மாதவி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. டி. இமான் இசையமைத்துள்ள இத்திரைப்படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு பரபரப்பான கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படம்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பலராம் கிருஷ்ணா, மனிதர்களின் மனநிலையும் குணமும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக களமிறங்கும் முகன், இமான் இசையில் நடிப்பது தன் கனவு என்றும், படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்றும் கூறினார்.

கதையைக் கேட்டவுடனேயே இதன் தனித்துவத்தை உணர்ந்ததாகக் கூறிய இசையமைப்பாளர் டி. இமான், முதல் படத்திலேயே ஒரு அனுபவமிக்க இயக்குநரைப் போல பலராம் கிருஷ்ணா தெளிவான பார்வையுடன் பணியாற்றியுள்ளார் எனப் பாராட்டினார். நடிகராக மட்டுமின்றி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்ட நிதின் சத்யா, நட்பின் அடிப்படையில் உருவான இத்திரைப்படத்தில் அனைவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாடகி ஸ்ரீநிஷா மற்றும் ஹைதராபாத்திலிருந்து தமிழில் அறிமுகமாகும் பாடகி பிரவஸ்தி ஆகியோர் பாடல்கள் குறித்த தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

நடிகை தான்யா ஹோப் மற்றும் நடன அமைப்பாளர் சாய் பாரதி ஆகியோர் கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பு அனுபவங்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் நினைவுகூர்ந்தனர்.

சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவில், வி. ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பில், தினேஷ் சுப்பராயனின் சண்டைப்பயிற்சியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி. ராஜேஷ் பணியாற்றியுள்ளார். ‘நிறம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ திரையரங்கு வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.