சென்னை: நவி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட படம் ‘வாழை’. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மாரி செல்வராஜ் பேசியது: இந்த படத்தை நானே வெளியிடக் காரணம், ரெட்ஜெயன்ட் இருக்கிறது எனும் தைரியம் தான். என் டீம் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர்.
அதை விட என் நடிகர்கள் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர், அவர்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கலையரசன், திவ்யா, நிகிலா விமல் எல்லோரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறினார்கள். இந்த பையன்களை என்ன வேண்டுமென்றாலும் செய்ய வைக்க முடியும் எனத் தெரியும், ஏன் கிளைமாக்ஸில் டீச்சர் இல்லை என எல்லோரும் கேட்டார்கள், ஆனால் அப்போது அவரது கால்ஷீட் இல்லை, இந்தப்படத்தை மொத்தமாக முடித்து விட்டு ஒன்றரை வருடம் கடந்து தான், கடைசி பாட்டை எடுத்தேன்.
படத்தின் கிளைமாக்சில் வரும் வாழை விபத்தில் சில விஷயங்களை நான் சொல்லவில்லை என்றார்கள். விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள்தான் காப்பாற்றினார்கள் என்பதை என்னைவிட விபத்தில் தப்பித்தவர்கள் சொல்கிறார்கள் என்பதே மிகப்பெரிய சந்தோஷம். விபத்தில் சிக்கியவர்களை ஜாதி, மதம் பார்க்காமல் காப்பாற்றிய அத்தனை மக்களுக்கும் இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு மாரி செல்வராஜ் கூறினார்.