அட்லி இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு நடித்துள்ள பான் இந்தியா படம், ‘ஜவான்’. கவுரவ வேடத்தில் சஞ்சய் தத், தீபிகா படுகோன் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படம், வரும் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் டிரைலர் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவில், ‘பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே சிறப்பாகப் பணியாற்றிய அட்லியை நினைத்து பெருமைப்படுகிறேன். டிரைலர் சர்வதேச தரத்தில் இருக்கிறது.
அட்லியின் பொறுமையையும், கடின உழைப்பையும் நன்கு உணர முடிகிறது. நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் அமைந்தது, கனவு நனவான மாதிரி இருக்கிறது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதிக்கு எனது பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ‘விக்னேஷ் சிவனின் அன்புக்கு நன்றி. நயன்தாரா அருமையானவர். இது உங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், இப்போது அவர் நன்கு அடிக்கவும், உதைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார். ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று ஜாலியாக எச்சரித்துள்ளார்.