தெலுங்கு முன்னணி நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடித்துள்ள சரித்திர கதை கொண்ட பான் இந்தியா படம், ‘ஹரி ஹர வீரமல்லு’. இதில் முகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப் வேடத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனும், இயக்குனரும், நடிகருமான ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆரம்பகால ஷூட்டிங்கில் பாபி தியோல் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. ஆனால், இந்தியில் பாபி தியோல் நடிப்பில் வெளியாகி கடும் சர்ச்சைகளை சந்தித்த ‘அனிமல்’ என்ற படத்தில் அவரது பிரமிக்க வைக்கும் நடிப்பை பார்த்த பின்பு, உடனடியாக ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா செயலில் இறங்கி, பாபி தியோலின் கதாபாத்திரத்தை முழுமையாக மாற்றி ரீ-ஷூட்டிங் நடத்தியுள்ளார்.
‘அனிமல்’ படத்தில் பாபி தியோல் வெளிப்படுத்திய மவுனமான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ‘சொற்களே இல்லாமல், முகபாவனைகளின் வழியாக மட்டுமே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய அவருடைய திறமை என்னை பிரமிக்க வைத்தது. அதனால்தான், ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாக மாற்றிவிட்டேன். இந்த புதிய வடிவமைப்பின் மூலம் அவுரங்கசீப்பின் கதாபாத்திரத்துக்கான ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாபி தியோலுக்கு சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை வெளிப்படுத்துவதும் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரது பார்வை சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது’ என்றார், ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா. தமிழில் சூர்யாவுடன் ‘கங்குவா’ படத்தில் நடித்திருந்த பாபி தியோல், தற்போது விஜய்யுடன் ‘ஜன நாயகன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.