விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா, நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். வரும் 11ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து விஷ்ணு விஷால் கூறுகையில், ‘இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ருத்ரா, இப்போது நான் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் என் சொந்த தம்பி கிடையாது. எனது பெரியப்பாவின் மகன். என் தந்தையும், பெரியப்பாவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அப்பா நன்றாக படிப்பார். பெரியப்பாவுக்கு சினிமாவில் மட்டுமே அதிக ஆர்வம்.
அப்போது படிப்பதற்கு கூட அவர்களிடம் பணம் இருக்காது. தியேட்டரில் எப்படியாவது படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட வேண்டும் என்பது அவர்களின் மிகப்பெரிய ஆசை. பணம் இல்லாததால் இருவரும் ஒரு டிக்கெட் வாங்கி, பாதி படத்தை அப்பாவும், பாதி படத்தை பெரியப்பாவும் பார்ப்பார்களாம். பிறகு ஒருவரிடம் ஒருவர் மீதி கதையை சொல்வார்களாம். 10ம் வகுப்பு வரை கஷ்டப்பட்டு படித்திருக்கின்றனர். அதற்கு மேல் அவர்களால் படிக்க முடியவில்லை. பிறகு என் பெரியப்பா கூலி வேலைகள் செய்து, என் அப்பாவை படிக்க வைத்து ஐபிஎஸ் ஆக்கினார்.
எனவே, ருத்ராவை சரியான படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவது என் தலையாய கடமையாக இருந்தது. நான் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டேன். இயக்குனர் சுசீந்திரன் மூலம் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டேன்’ என்றார். இப்படத்தில் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று துடிக்கும் இளைஞனாக ருத்ரா, அவரிடம் கதை கேட்கும் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்துள்ளனர்.