பெங்களூரு: ெபங்களூரு பெண்ணை நாய்கள் கடித்து குதறியதால், அந்த நாயின் உரிமையாளரான நடிகர் தர்ஷன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா (46), பெங்களூருவின் ஆர்.ஆர்.நகரில் வசித்து வருகிறார். இவர் மீது பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தர்ஷனுக்கு சொந்தமான மூன்று நாய்களை அவரது பணியாளர்கள் வெளியில் அழைத்து சென்றனர். அவ்வழியாக சென்ற அமிதா ஜிண்டால் என்ற பெண், நடைபாதையின் குறுக்கே நாய்களை வரிசை கட்டி நிறுத்தி வைத்திருந்ததை கண்டித்தார்.
அதனால் நடிகரின் பணியாளர்களுக்கும், அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அந்த நாய்கள் பெண்ணின் மீது பாய்ந்தன. இதனால், அந்தப் பெண்ணுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதுடன் அவரது ஆடைகளும் கிழிந்தன. அப்பகுதியை சேர்ந்த சிலர் அமிதா ஜிண்டாலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியில் நாய் கடித்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் மற்றும் வளர்ப்பு நாய்களின் உரிமையாளரான தர்ஷன், அவரது பணியாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 289-ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக தர்ஷனின் ெபயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை’ என்றனர்.