சென்னை: இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன், கடந்த 2019ல் ‘திருமணம்’ என்ற படத்தை இயக்கி நடித்தார். அவரது நடிப்பில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படம் கடந்த 2021ல் திரைக்கு வந்தது. இப்போது அவர் நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ படம் வரும் 7ம் தேதி திரைக்கு வருகிறது. தவிர, வெப்தொடர் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், 4 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கும் புதிய படத்தில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் 47வது படமாகும். கன்னடத்தில் உருவாகும் இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் தனது கையில் கத்தியுடன், உடம்பில் ரத்தம் வழிந்த நிலையில் கிச்சா சுதீப் அமர்ந்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், பணியாற்ற உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சேரன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். ‘ஆட்டோகிராஃப்’ போன்ற ஒரு மறக்க முடியாத பரிசு வழங்க நான் காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 2004ல் தமிழில் சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோகிராஃப்’ என்ற படத்தை, கன்னடத்தில் ‘மை ஆட்டோகிராஃப்’ என்ற பெயரில் கிச்சா சுதீப் இயக்கி நடித்தார். முன்னதாக சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தமிழ்ப் படம் உருவாகும் என்று தகவல் வெளியானது. ஆனால், அப்படத்தை இயக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக சமீபத்தில் சேரன் தெரிவித்திருந்தார்.