அரசியல்வாதி யோகி பாபுவுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கும்போது, வீட்டு வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரால் இன்னொரு மகனுக்கு தந்தையாகிறார். பிறகு அப்பெண்ணை வீட்டை விட்டு துரத்திவிடுகின்றனர். ஆனால், அப்பெண்ணின் மகன் யோகி பாபு மாதிரி அரசியல்வாதியாகி, ஆட்சியைப் பிடித்து, அதிகாரப் பதவியில் அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். முதல் மனைவியின் மகனும் அரசியலில் யோகி பாபுவை முந்திச்செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இரு மகன்களும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அப்போது முதலே அரசியல்வாதிகளுக்கான குணங்களுடன் வளர்கின்றனர். இறுதியில் அவர்கள் ஆசைப்பட்டது போல் அரசியலுக்கு வந்து, அதிகாரப் பதவியில் அமர்ந்தார்களா என்பது மீதி கதை. முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். தனது கேரக்டரை உணர்ந்து காமெடி செய்திருக்கிறார். கதையின் நாயகர்களாக சிறுவர்கள் இமயவர்மனும், அத்வைத் ஜெய் மஸ்தானும் இயல்பாக நடித்துள்ளனர்.
சில காட்சிகளில் வசனங்களை ஒப்பித்துள்ளனர். சிறுமி ஹரிகாவின் கேரக்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசியல் கட்சி தலைவராக வந்து அலப்பறை செய்யும் செந்தில், காமெடி செய்ய வாய்ப்பின்றி, கேரக்டரை சீரியசாக மாற்ற முயற்சித்துள்ளார். ‘பருத்திவீரன்’ சரவணன், சோனியா போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, மயில்சாமி, அஸ்மிதா சிங், லிசி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், வையாபுரி, ‘கும்கி’ அஸ்வின், கம்பம் மீனா, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
பள்ளிக்கூடம் மற்றும் அரசியல் கட்சிகளின் காட்சிகளை ஜெ.லஷ்மன் கேமரா நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது. ‘சாதகப்பறவைகள்’ சங்கர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம் சேர்த்துள்ளது. சமீபத்தில் மறைந்த என்.சங்கர் தயாள் எழுதி இயக்கியுள்ளார். இன்றைய போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியல் பற்றி சிறுவர், சிறுமிகளின் மூலம் காமெடியாகச் சொல்லியிருக்கிறார்.