8 தோட்டாக்கள் - விமர்சனம்
4/10/2017 10:12:56 AM
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி காணாமல் போகிறது. வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு முதியவர், தன்னைப் புறக்கணித்தவர்களுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுக்க நினைக்கிறார். காணாமல் போன போலீஸ் துப்பாக்கி, முதியவர் கைக்கு கிடைக்கிறது. அதிலுள்ள 8 தோட்டாக்களும் வெடிக்கிறது. அதற்கு பலியானவர்கள் யார், யார்? போலீசுக்கு துப்பாக்கி கிடைத்ததா? முதியவரின் கதி என்ன என்பது கிளைமாக்ஸ். புதுமையான கதைக்களத்தில், இயன்ற அளவுக்கு நியாயம் செய்திருக்கிறார் புது இயக்குனர் ஸ்ரீகணேஷ். துப்பாக்கியைத் தொலைத்த போலீசாக வெற்றி, முதியவராக எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
பிடிக்காத போலீஸ் வேலையை அசிரத்தையாகச் செய்யும் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார், வெற்றி. மிக இயல்பாக நடித்திருக்கிறார். 5 நிமிடம் தன் சோகக்கதையை கண்ணீரும், சிரிப்புமாகச் சொல்ல எம்.எஸ்.பாஸ்கரால் மட்டுமே முடியும். எல்லா புறக்கணிப்பையும் கோபமாக மாற்றிக்கொள்ளும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். சமரசங்களுடன் வாழும் டி.வி.நிருபராக, அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. இன்ஸ்பெக்டர் மைம் கோபி, போலீஸ் அதிகாரி நாசர், கான்ஸ்டபிள் டி.சிவா என அனைவரும், தங்கள் கேரக்டரைப் புரிந்துகொண்டு நன்றாக நடித்திருக்கிறார்கள்.
முதியவர்களைக் காக்கத் தவறும் குடும்பங்கள், அப்பாவி சிறுவர்களின் சிறை வாழ்க்கை, எல்லா துறைகளிலும் உள்ள முறைகேடுகள் என அனைத்து தளங்களையும் தொட்டுச் செல்கிறது கதை. ஹீரோவுக்கு போலீஸ் வேலையில் வெறுப்பு ஏற்படுதற்கான காரணம் வலுவாக இல்லை. எல்லோராலும் புறக்கணிக்கப்படுவதையே கொடூர வேதனையாகக் கருதும் முதியவர், ஒரு குழந்தையை சுட்டுக் கொன்றதை ஈசியாக எடுத்துக்கொள்வதில் லாஜிக் இல்லை. நாயகனின் வாழ்க்கைப் பிரச்னையை தன் வேலைக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஹீரோயின் செயலில் நிஜமான காதல் இல்லை. இதுபோல் சில குறைகளைத் தவிர்த்திருந்தால், படம் இன்னும் மெருகு கூடியிருக்கும்.