டிக்டொக் மூலம் ஹீரோயின் ஆனேன்! சாயாதேவி ஹேப்பி
3/11/2020 5:00:26 PM
சமீபத்தில் வெளிவந்த ‘கன்னிமாடம்’ படத்தில் கண்களால் கவிதை பாடியவர் அதன் நாயகி சாயாதேவி. இவர், பிரபல இயக்குநர் யார் கண்ணன்- நடன இயக்குநர் ஜீவா தம்பதியின் மகள். படம் வெற்றியடைந்திருந்தாலும் வெற்றியைத் தலைமீது வைத்துக் கொண்டாடாமல் இயல்பாக இருந்த சாயாதேவியிடம் பேசினோம்.
சினிமா குடும்பம் என்பதால் சினிமாவுக்கு வந்துவிட்டீர்களா?
அப்படியில்லை. எனக்கு சிறுவயதிலிருந்து சினிமா மீது ஆசை என்றெல்லாம் சொல்லமாட்டேன். வெறின்னு சொல்லலாம். சினிமா பைத்தியம் என்றும் சொல்லலாம். தெரிந்தோ, தெரியாமலோ சின்ன வயதிலேயே முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன். சாந்திகுமார் மாஸ்டர்தான் என்னுடைய நடன குரு. படிப்பில் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. சினிமாவில் நடிக்க அம்மா எனக்கு சப்போர்ட்டிவ்வாக இருந்தார். அம்மா 450 படங்களில் டான்ஸ் மாஸ்டராக ஒர்க் பண்ணியவர்.
கார்த்திக், பிரபு, மோகன், ஸ்ரீப்ரியா, ராதிகா போன்ற பிரபலங்களுடனும், பாலுமகேந்திரா, மணிவண்ணன், ஆர்.சி.சக்தி போன்ற ஜாம்பவான்களிடமும் பணியாற்றியவர். நான் சினிமாவுக்கு வருவதை அப்பா சுத்தமாக விரும்பவில்லை. அப்பாவுக்கு நான் படித்து பட்டம் வாங்க வேண்டும் என்பதில்தான் விருப்பம் இருந்தது. என்னுடைய பிடிவாதத்தால்தான் நடிகையாக முடிந்தது.
வாய்ப்பு எளிதாகக் கிடைத்ததா?
சினிமா பின்னணி இருந்தாலும் வாய்ப்பு என்பது திறமை, லக், டைம் பொறுத்தது. நான் சொல்லியவை மற்ற துறைகளுக்குப் பொருந்துமா, பொருந்தாதா என்று தெரியாது. ஆனால் சினிமாவுக்குப் பொருந்தும்.‘கன்னிமாடம்’ பட வாய்ப்பு ‘டிக் டாக்’ வீடியோ மூலம் வந்தது. நான் ‘டிக் டாக்’ பண்ணிய சில வீடியோக்களை இயக்குநர் போஸ் வெங்கட் பார்த்துவிட்டு அழைத்தார். அம்மாவும் என்னுடன் சேர்ந்து கதை கேட்டார். கதை எனக்குப் பிடித்திருந்தாலும் இவ்வளவு பெரிய கேரக்டரை என்னால் பண்ணமுடியுமா என்ற கேள்விதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
படப்பிடிப்பில் என்னைத்தவிர எல்லோரும் ஏற்கனவே படம் பண்ணியவர்கள். நான் மட்டுமே புதுமுகம். ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். ஒட்டுமொத்த டீமும் இயக்குநருக்கு ஆதரவாக இருந்ததோடு, தங்களுடைய தி பெஸ்ட் கொடுத்தார்கள். அதனால்தான் படம் சிறப்பாக வந்தது. சவால் என்று பார்த்தால் இடைவேளைப் பகுதியும் கிளைமாக்ஸ் பகுதியும் சவாலாக இருந்தது. இயக்குநர் சொன்னதை நூறு சதவீதம் பண்ணியதாக நினைக்கிறேன்.
போஸ் வெங்கட் திறமையான இயக்குநர். உணவு, ஓய்வு இல்லாமல் வேலை பார்த்தார். அவருக்கு என்று கேரவன் இருந்தாலும் அதை பயன்படுத்தமாட்டார். ஸ்பாட்டில் இங்கும் அங்கும் சுழன்று கொண்டே இருப்பார். அவர் கதை சொல்லும் விதமும் ஃபிரேமிங் ஸ்டைலும் அபாரமாக இருக்கும். தயாரிப்பாளர் ஹஷீர் படம் சிறப்பாக வருவதற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்.
ரசிகர்கள் உங்கள் கண்கள் பற்றி சிலாகித்துப் பேசுகிறார்களே... எந்தக் கடையில் மை வாங்குகிறீர்கள்?
சாவித்திரி அம்மா, சரிதா, அர்ச்சனா, ஷோபா போன்றவர்களின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர்கள் எப்படியெல்லாம் கண்கள் மூலமாக ரியாக்ஷனை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பேன். என்னுடைய கண்களைக் குறிப்பிட்டு பாராட்டு வருகிறது என்றால், அதெல்லாம் அவர்களிடம் கவனித்தவைதான்.
‘கன்னிமாடம்’ படத்தில் நான் அதிகம் பேசாத கேரக்டர். பதில் சொல்வதாக இருந்தாலும் கண்களால்தான் பதில் சொல்ல வேண்டும். இயக்குநர் போஸ் வெங்கட் சார் காட்சிகளை நுட்பமாக விவரித்தார். வீட்டில் நானும் ஐ பால்ஸை உருட்டி ரிகர்சல் பண்ணிப் பார்ப்பேன். ஆர்ட்டிஸ்ட்டாக ரெடியாகி படப்பிடிப்புக்கு போவேன். அங்கு போஸ் வெங்கட் சார் என்னை என்கரேஜ் பண்ணி கேரக்டரை மெருகேற்றுவார். சில சமயம், ‘சாயா... இது உங்களுக்கான சீன். நல்லா பண்ணா நல்ல பேர் வரும்’ என்று என்கரேஜ் பண்ணி நடிக்க வைத்தார்.
சின்ன வயசுலேயே சினிமாவுக்கு வந்துவிட்டோமோ என்று ஃபீல் பண்ணியதுண்டா?
அப்படியில்லை. ஏனெனில், இதைவிட சீக்கிரம் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன்.
யாரெல்லாம் பாராட்டினார்கள்?
அர்ச்சனா மேடம், சீதா மேடம் ஆகியோர் அம்மாவுக்கு குளோஸ் என்பதால் படம் பார்த்தவுடன் பாராட்டினார்கள். அர்ச்சனா மேடம் பாராட்டும்போது, ‘இந்தப் படத்துக்கான ரிசல்ட்டை அடுத்த படத்தில் பார்க்கலாம். உன் மீது இண்டஸ்ட்ரி பெரிய மரியாதை வைக்கும்’ என்றார். பத்திரிகையாளர்கள் என் தலை மீது கை வைத்து ஆசீர்வாதம் பண்ணியது நெகிழ்ச்சியாக இருந்தது.
அப்பா என்ன சொன்னார்?
நான் சினிமாவுக்கு வருவது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அப்பா என்னிடம் முகம் கொடுத்து பேசமாட்டார். சொந்தக் காலில் நின்று பெயர் எடுத்தால் கண்டிப்பாக பேசுவார் என்று நினைத்தேன். ‘கன்னி மாடம்’ படத்தில் அது நடந்தது. படம் பார்த்துவிட்டு சில நிமிடங்களுக்கு வார்த்தை வரவில்லை. ‘அவார்டு கிடைக்கிற அளவுக்கு பண்ணிட்ட. நல்லா வருவே’ என்றார்.
நடிகை என்றால் ஸ்ட்ரெஸ் இருக்குமே... எப்படி சமாளிக்கிறீர்கள்?
அதிகாலையில் எழுந்து தியானம் பண்ணுவேன். அம்மா மதர் டிவோட்டி என்பதால் எனக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. அம்மாவுக்கு சூரிய உதயத்துக்குப் பிறகு எழுந்திருக்கிறவர்களைக் கண்டாலே பிடிக்காது. அதனாலேயே சின்ன வயதிலிருந்து எங்களை விடியலுக்கு முன் எழுப்பிவிடுவார். அதிகாலையில் எழுந்திருப்பது மனதை ரிலாக்ஸ்டாக வைத்திருக்க உதவும்.
அப்பா மாதிரி எதிர்காலத்தில் டைரக்டராக வர விருப்பம் இருக்கா?
என்னுடைய தங்கைக்குத்தான் டைரக்ஷன் மீது ஆசை. சினிமா... நான் ஆசைப்பட்டு வந்த புரஃபஷன். அதை விடமாட்டேன். அந்தவகையில் நடிகையாகவே தொடர விரும்புகிறேன்.
அடுத்து என்ன படம் பண்றீங்க?
இப்போ பண்ணிக்கிட்டிருக்கிறது ‘கேட்காது’ என்ற படம். ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கிய டேனியல் இயக்குகிறார். அதில் பத்திரிகை நிருபராக வர்றேன். படம் முடிந்துவிட்டது. அந்தப் படத்தில் மனோபாலா சாரும் இருக்கிறார். அவரும் நான் சினிமாவில் தொடர ஒரு காரணம் என்று சொல்லலாம். அந்தப் படத்தில் நானும், அவரும் ஒரு காம்பினேஷனில் நடித்தோம். என்னுடைய டயலாக் டெலிவரி, தமிழ் உச்சரிப்பைப் பார்த்துவிட்டு, ‘நல்லா தமிழ் பேசுறியே’ என்று பாராட்டிவிட்டு என்னைப்பற்றி விசாரித்தார்.
யார் கண்ணன் மகள் என்று தெரிந்ததும் உடனே அப்பாவுக்கு போன் போட்டு ‘உன் பொண்ணு என்ன பிரமாதமா நடிக்கிறா’ என்று பாராட்டினார். ஒரு சீனியர் ஆக்டர் கம் டைரக்டர் அப்படிச் சொன்னதும் அப்பாவுக்கு என் நடிப்பு மீது நம்பிக்கை வந்தது என்று சொல்லலாம்.
படத்தில் பயந்த சுபாவம் உள்ளவராக வந்தீர்கள். நிஜத்தில் எப்படி?
நான் ரொம்ப அமைதியான பொண்ணு. எனக்கு ஃப்ரெண்ட்ஸும் மிக மிகக் குறைவு. வெளியே அவ்வளவாகப் போனதில்லை. டான்ஸ் ஸ்கூல், வீடு இதுதான் என்னுடைய பயண தூரம். ஆனால் வீட்டில் தங்கச்சிகிட்ட அவ்வப்போது சின்னச் சின்ன மோதல்கள் இருக்கும்.