திரைக்கதை ஆன சொந்த வாழ்க்கை அனுபவங்கள்!
3/18/2020 12:34:04 PM
இருபத்தைந்து நாட்களைத் தாண்டி தமிழகத்தின் பல நகரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘ஓ மை கடவுளே’. வித்தியாசமான கதையோடு வந்து வெற்றி கண்டிருக்கும் அஷ்வத் மாரிமுத்து, அடுத்த பட வேலைகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் வெற்றி பெற்றிருக்கும் இவரை, தெலுங்கு திரையுலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது. இளம் ஹீரோக்கள் பலரும், ‘கதை சொல்லுங்க பாஸ்’ என்று எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் அடுத்த தலைமுறை கெளதம் வாசுதேவ் மேனனுக்கு வாழ்த்துகள் சொல்லி கைகுலுக்கி, அவரிடம் பேசினோம்.
உங்க பின்னணி?
இயற்பெயர் அஷ்வத் நாராயண். அப்பா மாரிமுத்து, இந்திய உணவுக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் பெயரையும் சேர்த்துக் கொண்டுதான் அஷ்வத் மாரிமுத்து ஆகியிருக்கிறேன். அம்மா சித்ரா, நகராட்சியில் கமிஷனராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். என்னை சென்னையிலுள்ள கல்லூரியில் படிக்க வைத்தனர். 2011ல் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி முடித்தேன்.
அப்போது வந்த கேம்பஸ் இண்டர்வியூவில், என்னுடைய ரெஸ்யூமுக்குப் பதிலாக என் நண்பனின் ரெஸ்யூமை தவறுதலாகக் கொண்டு சென்றேன். அதைப் பார்த்து செம கடுப்பான இண்டர்வியூ அதிகாரிகள், நான் மிகப் பெரிய ஃபிராடு வேலை செய்ததாகக் குற்றம்சாட்டி, வேலை கிடைக்காமல் செய்துவிட்டனர். பிறகு இதையே கதைக்கருவாக வைத்து, ‘பன்னு தின்ன ஆசையா?’ என்ற குறும்படத்தை இயக்கி கல்லூரியில் திரையிட்டேன்.
அதைப் பார்த்து ரசித்த மூன்றாயிரம் மாணவர்கள், ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கைதட்டி என்னைப் பாராட்டினர். அவ்வளவுதான், புகழ் போதை என் தலைக்கு ஏறியது. பிறகு கல்லூரிப் படிப்பு கசந்தது. எந்த நிறுவனத்திலும் கைகட்டி வேலை பார்க்கக்கூடாது என்ற கர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து ‘முதல் முத்தம்’, ‘காத்தோடு போயே போச்சு’, ‘75 பெர்சன்ட்’ ஆகிய குறும்படங்களை இயக்கினேன்.
சினிமா என்ட்ரி எப்படி?
வரிசையாக குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் ஹீரோ அசோக் செல்வனின் அறிமுகம் கிடைத்தது. யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாத என்னை யார் நம்புவார்கள் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். இந்த நேரத்தில், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் நடந்தது. அப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சில மாதங்கள் பணியாற்றினேன்.
ஆனால், தொடர்ந்து என்னால் அவரிடம் இருக்க முடியவில்லை. அந்த யூனிட்டில் இருந்து வெளியே வந்த நான், உடனே லாஸ்ஏஞ்சல்ஸ் சென்று, அங்குள்ள நியூயார்க் பிலிம் அகாடமியில் சேர்ந்தேன். ‘அட்வான்ஸ் ஸ்கிரீன் ரைட்டிங் அண்ட் பிலிம் மேக்கிங்’ கோர்சில் ஒரு வருடம் படித்தேன். பிறகு சென்னை திரும்பிய நான், விளம்பரப் படங்கள் இயக்கினேன்.
என் வாழ்க்கையில் நான் சந்தித்த காதல் அனுபவங்கள் மற்றும் நண்பர்களின் காதல் சம்பவங்களைக் கேட்டு, ஐந்து வருடங்களுக்கு முன் உருவாக்கிய திரைக்கதைதான் ‘ஓ மை கடவுளே’. இந்தப் படத்துக்காக நிறையபேரிடம் காதலைப் பற்றி ஆய்வு செய்தேன். எந்த விஷயத்தையும் மிகைப்படுத்தாமல், காதல் என்றால் என்ன? நட்பு என்றால் என்ன என்று மிகத் தெளிவாக ஆடியன்சுக்குச் சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
படத்தில் காதல் காட்சிகள் ரொம்ப லைவ்வாக இருந்ததே?
ஆமாம். நிறைய பேர் இதைத்தான் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்கள். வெறுமனே புனைவாக இல்லாமல், நான் பார்த்த, கேட்ட, எனக்கு நடந்த சம்பவங்களை எல்லாம் இந்த திரைக்கதைக்கு பயன்படுத்திக்கிட்டேன். ‘லவ் இல்லாமல், லவ் பண்ண முடியாது’ என்ற ஒற்றை வரியை வைத்து கதை, திரைக்கதை எழுதினேன். வசனங்கள் ஒவ்வொன்றும் இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினேன். ‘சொன்னா புரியாது’ என்ற வசனம் இன்றைக்கு பிரபலமாகி இருக்கிறது என்றால், அதற்கு பலபேர் காரணம்.
‘நட்பில் இருப்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ள முடியுமா? கல்யாணம் செய்துகொண்ட பிறகு நட்பை தொடர முடியுமா?’ என்பதுதான் படத்தில் நான் கேட்ட கேள்விகள். அதற்கு சரியான பதிலையும் சொல்லியிருக்கிறேன். கல்யாணத்துக்குப் பிறகும் நட்பாக இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டி இருக்கிறேன். என் காதல் அனுபவத்தை ஆங்காங்கே கலந்து கொடுத்திருக்கிறேன்.
சொந்த அனுபவத்தையும் திரைக்கதையில் சேர்த்திருக்கிறீர்களா?
ஆமாம். ஆனால், எது எதுன்னு சொல்ல மாட்டேன். உண்மையைச் சொல்லப் போனால் என் நிஜக் காதலியைப் பார்ப்பதற்காகத்தான் நியூயார்க் பிலிம் அகாடமியில் சேர்ந்தேன். லண்டனில் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கும் அவள், எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினாள். அது என்னால் முடியாத நிலையில், திடீரென்று லவ் பிரேக்அப்பை அறிவித்தாள். நான் அப்படியே ஷாக்காகி நின்றேன். இப்போது ‘ஓ மை கடவுளே’ படத்தைப் பார்த்த அவள், மீண்டும் மனம் மாறி காதலைத் தொடர்கிறாள்.
சண்டையும் சச்சரவும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எப்போது திருமணம் என்று எனக்கும் சொல்லத் தெரியவில்லை. இப்போது என் காதலியின் பெயரைச் சொல்லும் நிலையில் நான் இல்லை. தெலுங்கில் ‘ஓ மை கடவுளே’ படத்தை ரீமேக் செய்கிறேன். நடிகர்கள் தேர்வு நடக்கிறது என்று சொன்ன அஷ்வத் மாரிமுத்து, விஜய் சேதுபதியின் வலிமையான நட்பு காரணமாக, அவருக்கு வித்தியாசமான கதை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார்.