இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒரு அரங்கை கடந்த 40 ஆண்டுகளாக ஒலிப்பதிவுக் கூடமாக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இளையராஜா ஒலிப்பதிவுக் கூடத்தை காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் வலியுறுத்தியது. இதனையடுத்து சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோவுக்குள் தியானம் செய்ய எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒரு கருத்தை தெரிவித்து பதில் அளிக்கும்படி இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாத் ஸ்டுடியோ தரப்பில், உரிமையியல் நீதிமன்றத்தில் ₹50 லட்சம் இழப்பீடு கோரி தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் குற்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர், மற்றும் வழக்குரைஞர் மட்டுமே உடன் வர வேண்டும்.இந்த நிபந்தனைகளை ஏற்று தனது கைப்பட இளையராஜா நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்தால் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டது. அப்போது இளையராஜா தரப்பில் நிபந்தனைகளை ஏற்று மனு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை புதன் கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.