ஐதராபாத்: இயக்குனர் ஷங்கருடன் மோதல் ஏற்பட்டதால் தெலுங்கு படத்திலிருந்து ஆர்ட் டைரக்டர்கள் விலகிவிட்டனர். ராம்சரண், கியரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில் உள்பட பலர் நடிக்கும் தெலுங்கு படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆர்ட் டைரக்டர்களாக மோனிகா, ராமகிருஷ்ணா பணியாற்றி வந்தனர். படத்துக்காக பல்கலைக்கழகம் ஒன்றின் செட் போட வேண்டுமாம். இந்த செட் அமைப்பது தொடர்பாக ஷங்கருக்கும் மோனிகா, ராமகிருஷ்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்திலிருந்து மோனிகாவும் ராமகிருஷ்ணாவும் விலகிவிட்டனர். இதேபோல் புரொடக்ஷன் டிசைனராக ரவிந்தர் ரெட்டி பணியாற்றி வந்தார். படத்தின் பட்ஜெட் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் ரவிந்தர் ரெட்டிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இந்த படத்திலிருந்து ரவிந்தர் ரெட்டியும் விலகிவிட்டார். இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்குவதற்காக ஷங்கர் சென்னை வந்துள்ளார். இதனால் 2 மாதத்துக்கு ராம்சரண் படத்துக்கான படப்பிடிப்பு நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.