சென்னை: அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா, மவுனிராய் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘பிரம்மாஸ்திரம் முதல் பாகம்: ஷிவா’. வரும் செப்டம்பர் 9ம் தேதி தியேட்டரில் வெளியாகும் இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் இயக்குனர் ராஜமெளலி வெளியிடுகிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்த ராஜமவுலி, நாகார்ஜூனா ஆகியோர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற ரன்பீர் கபூர், பிறகு மேடையில் பேசியதாவது: என் காதல் மனைவி அலியா பட்டை மிகவும் நேசிக்கிறேன். அவரைப் பற்றி நான் சொன்னது காமெடிக்காக மட்டுமே. அதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், இதுகுறித்து பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அலியா பட்டின் கர்ப்பம் குறித்து நான் தமாஷாக சொன்ன விஷயம் இவ்வளவு சீரியசாகும் என்று உண்மையிலேயே நான் எதிர்பார்க்கவில்லை. அடிப்படையில் நான் ஒரு மோசமான நகைச்சுவை உணர்வு கொண்டவனாக இருக்கிறேன். இப்படித்தான் சில நேரங்களில் நான் தமாஷாக சொன்ன விஷயம் என்னை விமர்சிக்க வைத்து விடும். இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் இருந்து, இன்றைய நவீன உலகத்துக்கு தகுந்த மாதிரி உருவாக்கப்படுள்ள கற்பனைக் கதையுடன் ‘பிரம்மாஸ்திரம்’ உருவாகியுள்ளது. ‘பிரம்மாஸ்திரம்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்துள்ளேன். கலை, கலாச்சாரம், இசையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் உங்களுடன் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். கடந்த 2013லேயே இப்படம் குறித்து நானும், அயன் முகர்ஜியும் பேசினோம். கதையின் உருவாக்கத்துக்காக கடந்த பத்து வருடங்களாக அயன் முகர்ஜி கடுமையாக உழைத்துள்ளார். அமிதாப் பச்சன், நாகார்ஜூனா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும்போது அலியா பட்டை சந்தித்தேன். பிறகு எங்களிடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் எங்களுக்கான புரிதலும், பரஸ்பர நலம் விசாரிப்புகளும் காதல் என்ற அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தது. கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். விரைவில் படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து நானும், அலியா பட்டும் எங்கள் குழந்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.