கேரள கோயிலுக்குள் நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நேற்று பழனி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். சமீபத்தில் பிரசித்தி பெற்ற கேரளா திருவைராணி குளம் மகாதேவர் கோயிலுக்கு அமலா பால் சென்றார். அவர் கிறிஸ்தவர் என்பதால் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து வெளியில் நின்றபடி சாமி கும்பிட்டுவிட்டு அவர் அங்கிருந்து வெளியேறினார். இது பற்றி தனது சமூக வலைத்தளத்தில் கூறும்போது, ‘சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் என்னை தடுத்து நிறுத்திவிட்டார்கள். உள்ளே செல்ல தடை விதித்தார்கள். இதனால் நான் கோயிலுக்கு வெளியே நின்றே சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும்’ என்றார். இந்நிலையில், அமலா பால் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.