Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

100 வயது பழம்பெரும் நடிகை கிருஷ்ணவேணி காலமானார்

ஐதராபாத்: பழம்பெரும் திரைப்பட நடிகையும், தயாரிப்பாளரும், பாடகியுமான சித்தஜல்லு கிருஷ்ணவேணி, நேற்று தன் 100வது வயதில் ஐதராபாத் பிலிம் நகரில் இருக்கும் வீட்டில் காலமானார். தமிழில் 1940ல் திரைக்கு வந்த ‘காமவல்லி’ என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார்.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், பங்கிடி பகுதியில் 1924 டிசம்பர் 24ம் தேதி பிறந்த கிருஷ்ணவேணி, மேடை நாடகங்களில் நடித்தார். 1935ல் ‘சதி அனசூயா’ என்ற தெலுங்கு படத் தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தனது 15வது வயதில், 1939ல் மிர்சாபுரம் ஜமீன் தார் மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூரை திருமணம் செய்துகொண்டார். 1949ல் ‘மன தேசம்’ படத்தை தயாரித்த கிருஷ்ணவேணி, நடிகராக என்.டி.ராமாராவ், இசை அமைப்பாளராக கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ், பின்னணி பாடகியாக பி.லீலா ஆகியோரை அறிமுகம் செய்தார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த கிருஷ்ணவேணி, தெலுங்கில் ‘மல்லி பெல்லி’, ‘பக்த பிரஹலாதா’, ‘பீஷ்மா’, ‘பிரம்ம ரதம்’, ‘கொல்லபாமா’ ஆகிய படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். ‘எம்ஆர்ஏ’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினார். அன்னமாச்சார்யா கீர்த்தனையை தெலுங்கு படம் ஒன்றில் முதன்முதலாகப் பாடியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.