ஒரு கல்லூரி ஹாஸ்டல் அறை எண் 418-ல் மர்மமான சம்பவங்கள் நடந்தது. பல வருடங்களாக மூடப்பட்டுக் கிடந்த அந்த ஹாஸ்டல், மீண்டும் திறக்கப்படுகிறது. அங்கு விவேக் என்ற மாணவன் சேர்கிறான். அதன் பிறகு அந்த அறையில் அமானுஷ்ய அதகளம் தொடங்குகிறது. பிளாஷ்பேக்கில் அந்த அறையில் என்னென்ன நடந்தது என்பதை காட்டுகிறார்கள். இனி என்ன நடக்கும், இதற்கு என்ன காரணம் என்பதை திகிலுடன் சொல்கிறது படம்.
குழந்தை பாக்கியம் பெற தன் குடும்பத்தினரையே பலி கொடுக்கிற கொடூர வேடத்தில் மிரட்டுகிறார் சைத்யா ஆச்சார். அதே சமயம், நடனக் கலைஞராக, குழந்தையில்லாத ஏக்கத்தில் மனம் நொறுங்கிப் போனவராக இன்னொரு சோக முகத்தை காட்டுகிறார். மாணவன் விவேக்காக சூர்யா ராஜ் வீரபத்தினா நடித்துள்ளார். பேயாட்டத்தை பார்த்து அலறும் வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார். பிரீத்தி பகதாலாவுக்கு ஏற்ற வேடம் தரப்பட்டுள்ளது. அதில் அவர் புகுந்து விளையாடுகிறார்.
மாணவராக சரண் லக்கராஜு, மனநல மருத்துவராக ரமேஷ் இந்திரா, சஷாங்க் பாட்டீல், ஸ்ரீ வைஷ்ணவ் உள்பட பலரும் நன்று. பின்னணி இசையில் திகிலை பரப்புகிறார் வெங்கி ஜிஜி. தினேஷ் திவாகரனின் ஒளிப்பதிவு, காட்சிகளால் பயமுறுத்த தவறவில்லை. பல படங்களில் பார்த்து சலித்த காட்சிகளை தவிர்த்திருக்கலாம். திரைக்கதையில் இயக்குனர் கீர்த்தன் நடகௌடா இன்னமும் மெனக்கெட்டிருக்கலாம்.
