Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

4த் ஃப்ளோர் விமர்சனம்...

சென்னை புறநகர் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 4வது ஃப்ளோரில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள், ஐடி ஊழியர் ஆரி அர்ஜூனனை நிலைகுலைய வைக்கிறது. அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து பிரிந்த காதலியும், அவரது மகளும் திடீரென்று மாயமாகின்றனர். அவர்களை தேடி போலீசிடம் செல்லும் ஆரி அர்ஜூனனுக்கு இரவு நேர கனவில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இந்நிலையில், மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஆரி அர்ஜூனன், காதலியை தேடும்போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது.

அது என்ன? காதலி கிடைத்தாரா? கனவில் கண்ட சம்பவங்கள் நிஜவாழ்க்கையில் நடந்ததா என்பது மீதி கதை. மர்டர் மிஸ்ட்ரியை, ஒரு ஜானரில் அடக்க முடியாத படமாக எழுதி இயக்கியுள்ளார், எல்.ஆர்.சுந்தரபாண்டி. மனநிலையும், மர்மமும் கலந்த சைக்காலஜிக்கல் திரில்லரில் கனவுகளுக்கும், நிஜவாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். ஆரி அர்ஜூனன் நடிப்பு இயல்பாக இருக்கிறது.

தனது மகளை பற்றி அறிந்து துடிப்பது உருக வைக்கிறது. ஆக்‌ஷனில் பாய்ந்து அடித்திருக்கிறார். தீப்ஷிகாவுக்கு அதிக வேலை இல்லை. வில்லனாக சுப்பிரமணியம் சிவா வழக்கமாக கர்ஜித்துள்ளார். மற்றும் பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு சம்பவங்களை அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்த ஜே.லஷ்மன், காட்சிகளில் அலறவிடும் பின்னணி இசை வழங்கிய தரண் குமார், அரங்குகளை வடிவமைத்த (மறைந்த) சுரேஷ் கல்லேரி, விறுவிறுப்பாக எடிட்டிங் செய்த ராம் சுதர்சன், ஸ்டண்ட் காட்சிகள் அமைத்த டேஞ்சர் மணி ஆகியோர் பலம் சேர்த்துள்ளனர். குடியிருப்புவாசிகளை அரசியல்வாதிகள் மிரட்டி அடிபணிய வைப்பது, அதை ஹீரோ எதிர்ப்பது என்று, பழைய பாணி கதை நெருடலாக இருக்கிறது.