கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என கனமான கதையில் ஒரு படம். ஒரு கிராமம். அதில் ஏழு சிறுவர்கள் குழுவாக இணைந்து திரிகிறார்கள். கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். கால்பந்து விளையாட்டில் இந்தியாவுக்காக விளையாடி சாதனை புரிந்த ஒருவர் பயிற்சியாளராக கிடைக்கிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பின், 14 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டும் கலந்துகொள்கிற உள்ளூர் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களை சூழ்கிற பிரச்னைகளைக் கடந்து போட்டியில் ஜெயிக்கிறார்களா, தோற்கிறார்களா என்பது மீதிக் கதை. இயக்கம் நிகில் பிரேம் ராஜ்
கதையின் நாயகன் சிறுவன் தனிஷ். விளையாட்டில் ஆர்வமாக இருப்பது, வயதையும் உடல்வாகையும் காரணமாக்கி பயிற்சியில் சேர்த்துக் கொள்ளாதபோது பரிதாபமாய் அமர்வது, போட்டியில் இறங்கியபின் புயல் வேகததில் சுழன்றடிப்பது என நடிப்பு அப்ளாஸ் பெறுகிறது. தனிஷுடன் கூட்டாளிகளாக வருகிற மற்ற ஆறு சிறுவர்களும் கால்பந்து விளையாட்டில் அசத்துவதோடு, மற்ற நடவடிக்கைகளாலும் ஒவ்வொரு விதத்தில் கவனம் பெறுகிறார்கள்.
ஆண்டனி வர்கீஸ், கச்சித நடிப்பு. அவரது காதலியாக வருகிற ஜூமானா அப்து ரஹ்மானின் எக்ஸ்பிரஷன்கள் கியூட்டாக இருக்கிறது. பயிற்சியாளராக நடித்திருப்பவர் இந்திய முன்னாள் கால்பந்து சாம்பியன் ஐ எம் விஜயன். அவர் வருகிற காட்சிகள் ரசிக்க வைக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இசை கேட்கலாம். ஒளிப்பதிவாளர் ஃபயஸ் சித்திக் பணி பாராட்டலாம்.
