Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘ஆடை’ கேரக்டரை விரும்பாத அமலா பால்

மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப் படவுலகில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகைகளில் ஒருவராக இருப்பவர், அமலா பால். கடந்த 2019ம் ஆண்டு எம்.ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த படம், ‘ஆடை’. சமீபத்தில் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமலா பால், திரைப்படங்களையும், அதிலுள்ள தனது கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறை குறித்து பேசினார். தான் எப்போதுமே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புவதாகவும், ஒரேமாதிரியான கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார். அவர் கூறுகையில், ‘திரைக்கதையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நான் எப்போதுமே கிரேஸியாகத்தான் யோசித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனது சிந்தனை முறை சற்று வித்தியாசமானது. கடந்த காலத்தில் செய்த ஒரு விஷயத்தை மீண்டும் செய்ய எனக்கு என்றுமே விருப்பம் இல்லை.

வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற தாகம் எனக்குள் எப்போதுமே இருக்கும். கதாபாத்திரங்கள் மற்றும் கதைகள் விஷயத்தில் என்னை திருப்திப்படுத்துவது என்பது சற்று கடினம். அதனால்தான் இந்த விசித்திரமான கதாபாத்திரங்கள் என்னை நோக்கி வருகின்றன என்று நினைக்கிறேன். அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்’ என்றார். தான் நடித்த ‘ஆடை’ என்ற படத்தை பற்றி பேசிய அமலா பால், ‘தற்போது அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்பேன் என்று நான் நினைக்கவில்லை. இப்போது ‘ஆடை’ போன்ற ஒரு படத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்டால், நிச்சயம் நான் அதில் நடிக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்’ என்றார். ‘ஆடை’ படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், ஆடை அணியாமல் அமலா பால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.