தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அபிராமிக்காக வருந்திய ஆர்.விக்கு பாக்யராஜ் ஆறுதல்

கருணாநிதி எழுதி இயக்கியுள்ள படம், ‘இந்தியன் பீனல் லா’. இதில் ‘ஆடுகளம்’ கிஷோர் மனைவியாக அபிராமி நடித்துள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ‘இங்குள்ள அபிராமியை என்னால் மறக்க முடியாது. நான் இணைந்து பணியாற்ற விரும்பிய நடிகை அவர். மிகவும் அழகான, திறமையான நடிகையான அவரது சிரிப்பு சிறப்பானது, வசீகரமானது. நான் இயக்குவதாக இருந்த ‘உலகை விலை பேசவா’ என்ற படத்தில் கார்த்திக், அபிராமி ஜோடி சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படத்தின் பணிகள் முடக்கப்பட்டது. அபிராமியுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்று நான் வருத்தப்படுகிறேன்’ என்றார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேசிய கே.பாக்யராஜ், ‘நான் இயக்கி நடித்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற படத்தில் நடிக்க முதலில் வந்தவர், ரேவதி. அவரது வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இல்லை.

எனவே, சில காலம் காத்திருங்கள் என்று சொன்னேன்.‌ அந்த இடைவெளியில் எனது குரு பாரதிராஜா, தனது இயக்கத்தில் ‘மண் வாசனை’ என்ற படத்தில் ரேவதியை அறிமுகப்படுத்தி விட்டார்.‌ அடுத்து எனது படத்தில் சிங்கப்பூரை சேர்ந்த ரஞ்சனியை அறிமுகப்படுத்த போட்டோ ஷூட் நடத்திவிட்டு, அவரை நான் காத்திருக்க சொன்னேன். அதற்குள் முந்திக்கொண்ட பாரதிராஜா, தனது இயக்கத்தில் ‘முதல் மரியாதை’ என்ற படத்தில் ரஞ்சனியை அறிமுகப்படுத்தி விட்டார். ‘அந்த 7 நாட்கள்’ என்ற படத்தில் என்னுடன் நடித்த அம்பிகா, தனது தங்கை ராதாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது ராதாவிடம், எனது அடுத்த படமான ‘தூறல் நின்னு போச்சு’வில் கிராமத்து பெண்ணாக அறிமுகப்படுத்துகிறேன் என்று சொன்னேன். அதற்குள் பாரதிராஜா முந்திக்கொண்டு ராதாவையும் நடிக்க வைத்துவிட்டார். இப்படி நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு தவறிக்கொண்டே இருந்தது. எனவே, அபிராமியை இயக்க தவறிவிட்டதை நினைத்து ஆர்.வி.உதயகுமார் வருத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.