யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 1’, ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறிய அவர், அதன்பிறகு நடிகை கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்’ என்ற பான் வேர்ல்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா ஆகிய ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 1940 முதல் 1970ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாக கொண்டு இந்த ஆக்சன் திரில்லர் படம் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியாக இருந்த இப்படம் பல்வேறு காரணங்களால் பல முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இறுதியாக வரும் ஆகஸ்ட் 26ம் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் யஷ் கதாபாத்திர அறிமுக வீடியோ, டீசர் என அனைத்திலுமே அதீத வன்முறை மற்றும் கவர்ச்சி கலந்த காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து 5 ஹீரோயின்களை அறிமுகப்படுத்தும் ‘லேடிஸ் அண்ட் லேடிஸ்’ என்ற முன்னோட்டம் கடந்த மாதம் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் ‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் யஷ் மிரட்டியுள்ளார். டிரைலர் முழுவதும் அதிரடி சண்டை காட்சிகளுடன் நிரம்பி காண்போரை பிரமிக்க வைக்கிறது.
