சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை, வள்ளுவர் கோட்டம் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர். ‘புருஷன்’ படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பொதுச் செயலாளர் விஷால் கலந்துகொள்ளவில்லை.
இக்கூட்டத்தில் நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட பணிகளை விரைந்து முடித்து, வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிரம்மாண்டமான முறையில் திறப்பது குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நாடக துறை மற்றும் திரைப்பட துறையில் நீண்டகாலமாக பங்காற்றி வரும் மூத்த மற்றும் நலிந்த கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது,
இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மற்றும் உண்மைக்கு புறம்பான விமர்சனங்களை வைப்போர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு நாசர் பேசுகையில், ‘நடிகர் சங்க புது கட்டிடம் 2 மாதங்களில் வந்துவிடும். தமிழக முதல்வர் விஜய் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பார்’ என்று தெரிவித்தார்.
