Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரியாலிட்டி ஷோவில் மோதிக் கொண்ட நிகழ்வால்; நடிகை சங்கீதா பட்டுக்கு திடீர் மூச்சுத்திணறல்; டாக்டர்களின் எச்சரிக்கையால் அதிரடி முடிவு..!

பெங்களூரு: பிரபல கன்னட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சங்கீதா பட், கடுமையான மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறியுள்ளார். கன்னட நடிகை சங்கீதா பட், தனது திரைப்பயணத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் கனவோடு சுமார் 3 மாதங்கள் தயாராகி பிரபல ரியாலிட்டி ஷோ 13வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில், 4வது வாரத்தின் முடிவில் அவருக்கு திடீரென கடுமையான பதற்றமும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

சக போட்டியாளர்களின் குறைகளை மட்டுமே வெளிப்படையாக பேசி மோதிக்கொள்ளும் சூழலும், நள்ளிரவில் விளக்குகள் அணையும் வரை தூங்கக் கூடாது என்ற கடினமான விதிகளும் அவரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கின. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பதற்றத்தால் துடித்த அவருக்கு ரகசிய அறையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நிலைமை எல்லை மீறியது.

இதையடுத்து, தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், இதயத் துடிப்பு கட்டுக்குள் வராமலும், ரத்த அழுத்தம் தொடர்ந்து சீரற்ற நிலையிலும் இருந்தது தெரியவந்தது. எனவே அவரது உயிரைக் கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து உடனடியாக விலகுமாறு மருத்துவர்கள் திட்டவட்டமாக அறிவுறுத்தினர். இந்த அதிர்ச்சி அனுபவம் குறித்து நடிகை சங்கீதா பட் கூறுகையில், ‘நான் வெறும் நடிகை மட்டுமல்ல, எனக்கும் ஓர் உயிர் இருக்கிறது. வெறும் கோப்பைக்காகவும் பணத்திற்காகவும் எனது ஆரோக்கியத்தை அடமானம் வைக்க விரும்பவில்லை.

சக மனிதர்களைப் புண்படுத்திய இந்த போட்டியால் எனக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் 6 முதல் 7 கிலோ வரை உடல் எடை குறைந்துவிட்டது. தற்போது எனக்கு முழு ஓய்வு தேவைப்படுகிறது’ என்று வேதனையுடன் தெரிவித்தார். தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.