நடிகைகளுக்கு கலர், மொழி எல்லாமே பிரச்னைதான்: சம்யுக்தா பேச்சு
சென்னை: அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில், ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், சம்யுக்தா இணைந்து நடிக்கும் படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சம்யுக்தா பேசியதாவது: இயக்குனர் முகுந்தன் இப்படத்தை முழுக்க முழுக்க தன் தோளில் தாங்கியுள்ளார். ஆராதியா சொன்னது உண்மைதான்.
இன்று திரை வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு பிரச்னையாக உள்ளது. கலர், மொழி, மட்டுமல்ல, திருமணம் ஆகியிருந்தால் நடிக்கக் கூப்பிட மாட்டார்கள். இந்த நிலையெல்லாம் நடிகைகளுக்கு மாற வேண்டும் என்றார். தயாரிப்பாளர் அண்ணாதுரை பேசும்போது, ‘‘வருடத்திற்கு வரும் 240 படங்களில் 5 சதவீத படங்கள் தான் வெற்றி பெறுகிறது.
ஆனாலும் வருடத்திற்கு வருடம் புதிய தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. திரைப்படம் மீது இருக்கும் மோகம் தான் இதற்குக் காரணம். நாம் தினசரி செய்தித்தாளில் படிக்கும் ஒரு விஷயத்தை எடுத்துள்ளோம். அது நிஜத்தில் நடந்திருந்தால் என்னவாகும் என்பது தான் இப்படம்’’ என்றார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
