Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகை கங்கனா சர்மா பகீர்: சகோதரியை பாலியல் தொழிலில் தள்ளிய தந்தை

மும்பை: இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் கங்கனா சர்மா. இவர் தனது குடும்பத்தில் நடந்த கொடுமையான விஷயங்கள் குறித்து தற்போது பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது: என் அப்பா என்னையும், என் அம்மா, சகோதரியையும் மிகவும் கொடுமையாக அடிப்பார். என் சகோதரியின் திருமணத்திற்குப்பின் அந்த வீட்டில் விபசாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடப்பது எங்களுக்கு தெரிய வந்தது.

அப்போது எனக்கு 14 வயதுதான். ஒருமுறை என் சகோதரியுடன் அவரது கணவர் வீட்டுக்கு சென்றபோது இரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வதற்காக எழுந்தபோது என் சகோதரியின் வாயில் துணி வைக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்தேன். அங்கு நடந்ததை பார்த்து நான் மிகவும் பயந்துவிட்டேன். என்னுடைய சகோதரியும் பயந்து என்னிடம் எப்படியாவது தன்னை அந்த வீட்டில் இருந்து அழைத்து செல்லும்படி கேட்டார்.

ஆனால் நான் மிகவும் சிறியவளாக இருந்ததால் என்ன செய்வது தெரியவில்லை. பின் என் சகோதரியின் மாமனார் என்னை வீட்டைச் சுற்றி பார்க்க அழைத்து சென்றார். கீழே ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தது. அங்கிருந்து சிலர் வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்து என் சகோதரி உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு மேலே வந்துவிட்டார். அதன்பின் நாங்கள் வீட்டுக்கு திரும்பினோம்.

அந்த வீட்டுக்கு தான் மீண்டும் செல்ல மாட்டேன் என்று என் சகோதரி அப்பாவிடம் கூறினாலும் அப்பா அவரை அடித்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. திருமணமாகிவிட்டதால் அந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். அதற்குப்பின் ஒரு வாரம் வரை என் சகோதரியை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்பதால் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.

பல மாதங்களுக்கு பிறகு வேறொரு இடத்திலிருந்து எனது அக்காவை மீட்டோம். அப்போது அவள் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களிலேயே அவர் இறந்துவிட்டார். அவருக்கு என்னென்ன நடந்தது என்று முழுமையாக எங்களுக்கு தெரியாது. இன்றுவரை என் சகோதரியை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் இருக்கிறது. இவ்வாறு கங்கனா சர்மா கூறியுள்ளார்