மும்பை: நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதிகளில், கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடர் நேரத்தில், புனித கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக திபெத் சென்றிருந்த இந்தி நடிகை மானசி பரேக் மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்ப முடியாமல் வழியில் சிக்கிக்கொண்டனர். பல்வேறு சிரமங்களுக்கு பிறகு பாதுகாப்பாக மும்பை திரும்பியுள்ள மானசி பரேக், தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அது வருமாறு: நேபாள எல்லையான சீனாவின் நியாலாம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக, பேருந்திலேயே நாங்கள் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
பிறகு 40 மைல் தூரம் பயணித்து நேபாள எல்லையை அடைந்தோம். அங்கு மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டதால், அடுத்த பகுதியில் காத்திருந்த பேருந்துகளை சென்றடைவதற்காக, இடிபாடுகளுக்கு இடையே நடந்து சென்றோம். அதற்கு பிறகு கரடுமுரடான பாதையில் 4 மணி நேரம் பயணித்து காத்மாண்டுவை அடைந்தோம். சீனாவில் இருந்து நேபாள எல்லையை அடைந்தது, ஒரு போரில் மிகப்பெரிய வெற்றிபெற்றது போல் இருந்தது. மும்பைக்கு திரும்பி எனது குடும்பத்தினரையும், மகளையும் சந்தித்தபோது எல்லா கஷ்டங்களும் மறைந்துவிட்டது.
