மும்பை: பாலிவுட் தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி தொகுத்து வழங்கும் சாகச ரியாலிட்டி நிகழ்ச்சியின் 15வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நீர், வாகனங்கள் உள்பட பல்வேறு ஆபத்தான சவால்களை செய்து தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும். இந்த சீசனில் பாலிவுட் நடிகை ஜாஸ்மின் பாசின் (34) போட்டியாளராக கலந்துகொண்டு சாகசங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த நீர் மற்றும் வான்வழி சாகச சவாலின்போது, எதிர்பாராவிதமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவருக்கு மூளையில் லேசான அதிர்ச்சி ஏற்பட்டு, தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, 72 மணி நேரம் முழுமையாக ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்த பயங்கர விபத்து குறித்து பேட்டியளித்த ஜாஸ்மின் பாசின், ‘எனக்கு ஏற்பட்ட விபத்து எதிர்பாராத அனுபவமாக இருந்தது. சாகசம் நடந்தபோது என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது அந்த அனுபவத்தின் ஒரு பகுதி கூட எனக்கு நினைவில் இல்லை’ என்றார். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
