மும்பை: விமான நிலையத்தில் தகாத கோணத்தில் படம் பிடித்த போட்டோகிராபர்களுக்கு நடிகை மானுஷி சில்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், பெண் திரை நட்சத்திரங்களை சங்கடப்படுத்தும் நோக்கில் தவறான கோணங்களில் படம் பிடிக்கும் நபர்களை அவர் அண்மையில் கடுமையாக விளாசியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான மானுஷி சில்லர் (29) மும்பை விமான நிலையத்தில் இதேபோன்ற அத்துமீறலை நேரடியாக எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. டெல்லி செல்வதற்காக நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்த அவர், காரில் இருந்து இறங்கி புகைப்படக் கலைஞர்களுக்கு புன்னகையுடன் போஸ் கொடுத்தார்.
அப்போது சிலர் அவரது கண்ணியத்தை மீறி, பின்புறமாக சென்று சங்கடமான கோணங்களில் கேமராவில் படம் பிடிக்க தொடங்கினர். இதை கவனித்த மானுஷி சில்லர் கோபமாகி, ‘என்ன செய்கிறீர்கள்? அதனை (பின்புறமாக எடுக்கப்பட்ட படங்களை) அழித்து விடுங்கள். அந்த புகைப்படங்களை எங்கும் பதிவேற்ற வேண்டாம்’ என்று கண்டிப்புடன் கூறினார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு விடைபெற்றுச் சென்ற அவரது இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
