Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

என்னால் கூட சிறப்பாக நடிக்க முடியும்: ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி

சென்னை: விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த ‘கட்டா குஸ்தி 2’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலை குவித்து வரும் நிலையில், நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, `தினமும் படப்பிடிப்புக்கு செல்லும்போது, நம்முடைய உழைப்பில் மிகச்சிறந்த ஒன்றை கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். தியேட்டரில் ரசிகர்கள் படத்தை பார்க்கும்போது, அதில் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்துவிட கூடாது. ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் பிரமாண்ட வெற்றி என்பது எப்போதாவது ஒருமுறை அமையும். இப்போது நாங்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். படக்குழுவினரில் இந்த நபர்தான் முக்கியமானவர் என்று யாரையும் பிரித்து சொல்ல முடியாது.

பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களின் 100 சதவீத உழைப்பை வழங்கினர். அற்புதமான இந்த வெற்றியில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றிய இயக்குனர் செல்லா அய்யாவு, விஷ்ணு விஷால், மகளாக நடித்த சாரா ஜியானா ஆகியோருக்கு நன்றி. நான் கனவிலும் நினைத்து பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியையும், மறக்க முடியாத இனிமையான நினைவுகளையும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னால் கூட சிறப்பாக நடிக்க முடியும் என்று இப்படம் நிரூபித்துள்ளது. அதை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு ரசிப்பதை பார்த்து மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது’ என்றார்.