பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்துவிட்டு, தற்போது புதுப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் சோர்வுடன் காணப்படும் சுனைனா, நேற்று திடீரென்று வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மர்ம நபர்கள் ஏஐ மூலமாக சுனைனாவின் முகத்தை மார்ஃபிங் செய்து, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். உடனே அது சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அதை பார்த்து அதிர்ந்த சுனைனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏஐ மூலமாக எனது முகத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் மோசமான வீடியோ குறித்து எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
எனது உருவத்தையும், அடையாளத்தையும் பயன்படுத்தி, இந்த அருவெறுப்பான வீடியோ வெளியிடப்பட்டதை குறித்து வேதனை அடைகிறேன். இந்த வீடியோவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது எனது கண்ணியம், தனியுரிமை மற்றும் அடையாளத்தின் மீதான மாபெரும் தாக்குதலாகும். இச்செயல், தகவல் தொழில்நுட்ப சட்டம்-2000 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் மாபெரும் குற்றவியல் செயலாகும். இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்த வீடியோ உருவாக்கத்திலும், பகிர்விலும் தொடர்புடைய அனைவரும், இதுதொடர்பான வீடியோக்களை அனைத்து கணக்குகளில் இருந்தும் அழிக்க வேண்டும். மேற்கொண்டு பகிர்பவர்கள் மீது எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
