ஐதராபாத் ஷேக் பேட் பகுதியில் உள்ள அபர்ணா ஒன் குடியிருப்பில் வசித்து வரும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், தனது பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் நள்ளிரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒளிபரப்பப்படுவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டு ஐதராபாத் போலீசாருக்கு புகார் செய்தார்.
எங்கள் குடியிருப்பில் உள்ள முதியவர்கள், குழந்தைகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஃபிலிம் நகர் காவல் ஆய்வாளருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐதராபாத் போலீசார் பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து சில நெட்டிசன்கள் அல்லு சிரிஷை வசைபாடி பதிவுகள் போட ஆரம்பித்தனர். தனக்கு எதிரான ஆன்லைன் ட்ரோல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த அல்லு சிரிஷ், ‘‘நண்பர்களே... நானும் தீவிர ஆன்மீகவாதிதான், ஹனுமான் பகவானை தினமும் வழிபடுபவன் தான். ஆனால் நள்ளிரவு 2 மணிக்கு டிஜே செட் போட்டு பேரிரைச்சலுடன் பாட்டு வைப்பது பக்தி கிடையாது. நான் புகார் அளித்தது மக்களின் பொது அமைதி மற்றும் நாகரிகத்தை பற்றியது தானே தவிர, ஆன்மீக பக்திக்கு எதிரானது அல்ல’’ என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
