மலையடிவாரத்தில் வறட்சியான ஒரு கிராமத்தில் வசிப்பவர், ராஜன் தேஜேஷ்வர். மூர்க்க குணம் படைத்த அவர், பணத்துக்காக பல கொலைகளை செய்கிறார். ஒருகட்டத்தில் ஐரா அகர்வாலின் தந்தையை கொல்கிறார். இதையறிந்து கொதிக்கும் ஐரா அகர்வால், ராஜன் தேஜேஷ்வரை பழிவாங்க துடிக்கிறார். அதன் முடிவு என்ன என்பது மீதி கதை. படம் முழுக்க அருகன், சர்மிளா பாரதி கேரக்டர்களில் வாழ்ந்துள்ள ராஜன் தேஜேஷ்வர், ஐரா அகர்வால் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆக்ஷன் காட்சிகளில் ராஜன் தேஜேஷ்வர் பறந்து, பறந்து எதிரிகளை பந்தாடுகிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் சண்டையில் ராஜன் தேஜேஷ்வரின் ருத்ர தாண்டவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐரா அகர்வாலின் பழிவாங்கும் எண்ணம் புதிதில்லை என்றாலும், அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் புதிது. முக்கிய வேடங்களில் சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரீஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.
வறட்சியான மலைப்பகுதி மக்களின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் பரத் குமார். மிக்கி ஜெ.மேயரின் இசையில் பாடல்கள் துடிப்பாக இருக்கிறது. பின்னணி இசை அழுத்தமாக இருக்கிறது. எடிட்டர் ஆர்.ஸ்ரீராமர், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். வழக்கமான காதல், வன்முறை, அரசியல் பின்னணி, அடியாட்களின் அலப்பறை, பழிவாங்கும் கதையுடன் இயக்கியுள்ள திருஅருள் கிருஷ்ணா, கோலிவுட்டுக்கு நம்பகமான வரவாக தெரிகிறார்.
