சென்னை: நடிகை அனன்யா ராஜ், தூக்கத்திலேயே காலமானார். அவருக்கு வயது 27. மும்பையை சேர்ந்த அனன்யா ராஜ், கடந்த 2016ம் ஆண்டில் வெளியான ‘7 ஹவர்ஸ் டு கோ’ என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களை தாண்டி முன்னணி நிறுவனங்களின் இசை வீடியோக்களிலும், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் 2022ம் ஆண்டு னிவாஸ் ராஜு இயக்கத்தில் நவீன் சந்திராவுடன் இணைந்து ‘தக்கடே லே’ என்ற திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். மேலும், அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கி இயக்கத்தில் அஷ்மித் பட்டேல், அத்யாயன் சுமன் ஆகியோருடன் இணைந்து ‘மெட்ராசி கேங்’ படத்திலும் நடித்தார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல் மற்றும் மனரீதியான கடுமையான பாதிப்புகளுடன் போராடி வந்த இவர், அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார்.
இது குறித்து அவரது குடும்பத்தின் சோஷியல் மீடியாவில் வெளியிட்ட பதிவில், ‘‘மிகவும் கனத்த இதயத்துடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம். அனன்யா ராஜ், அதிகாலை தூக்கத்திலேயே உயிர் பிரிந்தார். கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக அவர் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சங்கடங்களை சந்தித்து வந்தார். அவர் மன உறுதி கொண்ட பெண், ஒரு மகாராணியை போல வாழ்ந்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர். தூக்கத்திலேயே அனன்யா ராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
அனன்யா ராஜ் கடந்த ஜூலை 15ம் ேததியே இறந்துள்ளார். சரியாக ஒரு மாதம் கழித்து நேற்று முன்தினம்தான் இந்த தகவலை அவரது குடும்பத்தினர் வெளியே தெரிவித்துள்ளனர். இளம் வயதிலேயே நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
