ஸ்மித் ஆஷர் இசை அமைத்த ‘அன்னக்கிளியே’ என்ற மியூசிக் வீடியோ ஆல்பத்தை அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இப்பாடலை தீக்ஷிதா எழுதி, ஸ்மித் ஆஷருடன் இணைந்து பாடியுள்ளார். பவன் அலெக்ஸ், பிரகதி வத்சவா நடித்துள்ளனர். விஎஃப்எக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெற்று, பாடலின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. இதை விக்கி பப் இயக்க, ஜே சரோலா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீஜோ பரத்வாஜ் தயாரித்துள்ளார்.
அனிருத் தனது பிரத்தியேக யூடியூப் தளத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். தற்போது இப்பாடல் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. அடர்ந்த வனம், கழுகின் கூரிய பார்வை, தனியாக தவிக்கும் இளைஞன், பிரமாண்ட நீர்வீழ்ச்சிக்கு அருகே சிறிய குன்றில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் வனதேவதை, பார்த்தவுடன் கண்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் காதல், வனவாசிகளின் வில்லத்தன எதிர்ப்பு, தப்பித்து ஓடுதல், உயர்ந்த பாறை மீதிருந்து காதலுடன் காதலர்கள் குதிப்பது, ஆழமான நீர்நிலைக்குள் ஒன்றிணைவது, சங்க கால தமிழர் மரபில் போற்றப்பட்ட யாழி என்ற விலங்கின் மீது அமர்ந்து தப்பிப்பது, வான்வெளியில் மகிழ்ச்சியுடன் பறப்பது என்று அமைக்கப்பட்டுள்ள இப்பாடலுக்கான காணொளி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸின் பிரத்தியேக இணையதளத்தில் வெளியானது மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொன்மையான ஆலயங்களில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள யாழி என்ற பறவை மற்றும் விலங்கு இனத்தை சேர்ந்த மிருகத்தை விக்கி பப் தலைமையிலான குழுவினர் ஏஐ மூலம் உருவாக்காமல், கிராபிக்ஸ் மூலம் ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்து, ஜென் ஸீ கிட்ஸ்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில், யாழியை வான்வெளியில் பறக்க செய்திருப்பது புதுமையான முயற்சி என்று, திரையுலக கலைஞர்கள் பாராட்டி வருகின்றனர்.
