கான்பூர்: பிரபல டி.வி நடிகை அஞ்சலி அரோரா, சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள லஜ்பத் பவன் திடலில் நடந்த ‘நகடா நைட்ஸ்’ என்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்க, ரூ.3 லட்சம் கட்டணத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். கடந்த 15ம் தேதி இரவு 9 முதல் 9.45 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் அவர் நடனமாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இரவு 9.45 மணிக்கு மேடைக்கு வந்த அஞ்சலி அரோரா, 12 நிமிடங்கள் மட்டுமே நடனமாடிவிட்டு, திடீரென்று பாதியிலேயே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும், நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக ரூ.1.20 கோடி நஷ்டஈடு வழங்க கோரியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது வழக்கறிஞர் மூலம் அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும், அஞ்சலி அரோரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரி, ஸ்வரூப் நகர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அஞ்சலி அரோரா, ‘விழா ஏற்பாட்டாளர்கள் எனக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்கவில்லை. நான் தங்கியிருந்த ஓட்டல் அறையின் காலிங் பெல்லை தொடர்ந்து அடித்து, சிலர் அத்துமீறி என்னை தொந்தரவு செய்தனர்’ என்று விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக முன்பே அவர் மீடியாவிலும் பேசியிருந்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
