ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம், வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளனர். அஞ்சலி கூறுகையில், ‘இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். சூரி எனக்கு நல்ல நண்பர். தற்போது பல சாதனைகளை படைத்து வருகிறார்.
‘மண்டாடி’ படத்தில் சூரி பெற்ற வெற்றியை நான் பெற்ற வெற்றியாக கொண்டாடுகிறேன். எனது முதல் படத்தில் இருந்து நானும், ராமும் பயணித்து வருகிறோம். எனக்கு அவர் ஒரு தந்தையாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் அவரது இதயத்துக்கு எவ்வளவு நெருக்கம் என்று தெரியும். அதில் எனது கேரக்டரை அற்புதமாக வடிவமைத்துள்ள அவருக்கு நன்றி.
நான் நடிக்க வந்து 20 வருடங்களை நிறைவு செய்துள்ளதற்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர். எனது வெற்றிக்கு ராம், வசந்தபாலன், கார்த்திக் சுப்புராஜ், சுந்தர்.சி உள்பட பல இயக்குனர்கள் காரணமாக இருந்துள்ளனர். 55 படங்களில் நடித்துவிட்டேன். எல்லா இயக்குனர்களும் எனக்காக அற்புதமான கேரக்டர்களை உருவாக்கி அளித்திருக்கின்றனர்’ என்றார்.
