சென்னை: சினிமாவிலிருந்து அவ்வப்போது ஒதுங்கியிருக்கும் நடிகை ஷோபனா, கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘துடரும்’ படத்தில் நடித்தார். தீபாவளிக்கு திரைக்கு வரும் ‘ராமாயணா’ பான் இந்தியா படத்திலும் நடித்துள்ளார். அதே நேரத்தில், பல வருட நடனத்தால் தனது கணுக்கால்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், வார்ம்-அப் பயிற்சிகளின் முக்கியத்துவம் குறித்தும் ஷோபனா கூறிய வார்த்தைகள் கவனத்தைப் பெற்று வருகின்றன. இது குறித்து பேசிய அவர், ‘‘நான் பூரணமாக நலமாக இருக்கிறேன் என சொல்ல மாட்டேன்.
சென்னையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் எனக்கும் உள்ளது. அத்துடன் எனது இரண்டு கால்களிலும் சில பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. எனது இரண்டு பாதங்களின் வளைவுகளைத் (arch) தாங்கிப் பிடிக்கும் தசைநார்கள் (tendons) பலவீனமாக உள்ளன. அதனால் சில அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. நான் அதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. பல வருட நடன நிகழ்ச்சிகள் தான் இதற்குக் காரணம்.
இதையெல்லாம் எதிர்பார்ப்பது இயல்புதானே. எங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்றைய கலைஞர்கள் முன்னெச்சரிக்கையாகச் செய்வது போல வார்ம்-அப் பயிற்சிகளையோ அல்லது பிற உடற்பயிற்சிகளையோ எதுவும் செய்ததில்லை. இருப்பினும் இவற்றிற்கெல்லாம் அதற்கான மதிப்பு உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன்’’ என்று ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் தெளிவுபடுத்தினார்.
