Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹபீபி படத்துக்கு பாராட்டு விழா

சென்னை: மீரா கதிரவன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் ‘ஹபீபி’. தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்தனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்தார். திரையரங்கை தொடர்ந்து தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்திலும் 125 நாட்களை கடந்து ‘ஹபீபி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்காக, கில்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் படக்குழுவினரை பாராட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு படக்குழுவினரை பாராட்டினர். இயக்குனர் மீரா கதிரவன் பேசுகையில், ‘தமிழ் சினிமாவுக்கு 110 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான மொழியும் வாழ்வியலும் இருக்கின்றன. அதில் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றினாலும் தமிழையே தாய்மொழியாக கொண்டு வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையை பேசும் படம்தான் ‘ஹபீபி’.

இத்தகைய கதையை இயக்குவதற்கு நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்’ என்றார். கில்ட் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சக்ரவர்த்தி, தயாரிப்பாளர்கள் சாகுல் ஹமீத், கோவை இப்ராஹிம் உள்பட பலர் பங்கேற்றனர்.