Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரஹ்மான்: எ ரினைசன்ஸ் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் சுயசரிதை எழுதுகிறார்

சென்னை: தனது சுயசரிதையை எழுதி வருவதாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து, ‘ரஹ்மான்: எ ரினைசன்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதி வருகிறேன். அவர் இதன் இணையாசிரியராக இருக்கிறார். என்னுடைய உலகை வடிவமைத்த இசை, சிந்தனைகள், சவால்கள், ஆளுமைகள் மற்றும் படைப்பாக்க பயணம் பற்றியதாக இந்த புத்தகம் இருக்கும். கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா உள்பட பல முன்னணி இசை அமைப்பாளர்களிடம் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1992ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு மணிரத்னத்துடனான அவரது திரையுலக பயணம் இன்றுவரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், பலமுறை தேசிய விருதுகள், கிராமி விருதுகள், கோல்டன் குளோப் உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளையும், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளார்.

பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும் பல்வேறு தளங்களில் அவர் இயங்கி வருகிறார். ‘ரஹ்மான் எ ரினைசன்ஸ்’ என்பதற்கு ‘ரஹ்மான்: ஒரு மலர்ச்சி’ என்று அர்த்தம்.