‘அட்டகத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தினேஷ், அதற்கு பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ் என்றே அறியப்படுகிறார். தொடர்ந்து ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘குக்கூ’, ‘விசாரணை’ உள்பட பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ மற்றும் 26வது படமாக மதி ஆனந்த் இயக்கத்தில் ‘பந்தா கேங்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தினேஷ் அளித்த பேட்டியில், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜே எழிலரசி தான் அந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 27ம் தேதி தினேஷ் பிறந்தநாளையொட்டி விஜே எழிலரசி வெளியிட்ட பதிவில் தங்களது காதலை அறிவித்துள்ளார். அதில் இருவரும் சேர்ந்து இருப்பது, பூ கொடுப்பது, கைகளை கோர்த்துகொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், ‘என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கட்டும். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உங்களை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன்’ என்று விஜே எழிலரசி குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு முக்கிய நடிகர்களை நேர்காணல் செய்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வரும் விஜே எழிலரசி, ‘அட்டகத்தி’ தினேஷை காதலிப்பது சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஜோடிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
