Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாலகம் (தெலுங்கு) - ஓடிடி விமர்சனம்

அடிதடி, ஆர்ப்பாட்டமான தெலுங்கு சினிமாக்களுக்கு மத்தியில் கடந்த மாதம் வெளிவந்து சென்டிமெண்டில் உருக வைத்த படம். இப்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. தெலுங்கானா கிராமம் ஒன்றில் நடக்கிற கதை. தமிழில் சந்தானம் மாதிரி தெலுங்கில் பிரியதர்ஷி புலிகொண்டா. அவர்தான் படத்தின் நாயகன். கிராமத்தில் தாத்தா, அப்பா அம்மாவுடன் வசிக்கும் அவருக்கு ஏதாவது தொழில் செய்து முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆனால் 10 லட்சம் கடன் ஆனதுதான் மிச்சம். இந்த நேரத்தில் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள், பெண் வீட்டில் இருந்து வரும் வரதட்சணை 10 லட்சத்தை கொடுத்து கடனை அடைத்து விட திட்டமிடுகிறார் பிரியதர்ஷி. இந்த நேரத்தில் தாத்தா இறந்துவிட திருமணம் நிற்கிறது. தாத்தா சாவுக்கு உறவுகள் கூடுகிறார்கள். சித்தப்பா, அத்தை, மாமா என எல்லோரும் வருகிறார்கள்.

அத்தை மகள் காவ்யா கல்யாணராமை திருமணம் செய்தால் வசதியான மாமாவின் சொத்துகள் தனக்கு வரும், அதை வைத்து கடன் அடைக்கலாம் என்று திட்டமிடுகிறார். ஆனால் நடப்பது வேறு. அது என்ன என்பதுதான் படம். சிதைந்து போயிருந்த குடும்பத்தை ஒரு சாவு வீடு எப்படி சேர்த்து வைக்கிறது என்பதுதான் படம். காக்கா வந்து பிண்டத்தை சாப்பிட்டால்தான் இறந்தவர் மோட்சம் பெறுவார் என்கிற மூட நம்பிக்கையை கூடுதலாகவே வலியுறுத்திருந்தாலும் அந்த ஒன்றை வைத்து குடும்பம் ஒன்று சேருவது ஆறுதல். காமெடியும், சென்டிமென்ட்டும் சரியாக கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் வேனு யல்டான்டி. எல்லோருமே கேரக்டரை உள்வாங்கி இயல்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் பாடல்கள் பெரிய பங்கு வகிக்கும். அதையும் சரியான முறையில் தமிழில் மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சம் சிந்தனையும் தருகிற படம்.