சென்னை: மறைந்த பாலு மகேந்திராவிடம் இயக்குனருக்கான பயிற்சியை பெற்றவர், சக்திராஜ். திரைக்கு வந்த ‘மாரி’, ‘ப.பாண்டி’, ‘மாரி 2’, ‘ஆஹா கல்யாணம்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய அவர், தான் இயக்குனராக அறிமுகமாவது குறித்து கூறுகையில், ‘சென்னையில் இருந்து இரண்டு இளைஞர்கள் ராஞ்சியிலுள்ள பிரபலம் ஒருவரை சந்திக்க செல்கின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை கடந்து அந்த பிரபலத்தை சந்திப்பதற்குள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களே கதை.
நாடே போற்றும் பிரபலத்தை அவர்கள் சந்தித்தார்களா, இல்லையா என்பது திரைக்கதை. ‘வட சென்னை’ சரண், சுபாஷ் ஆகியோருடன் முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர். எஸ்.பி.விஜய் அமிர்தராஜ் கதை எழுத, ‘கப்பிள் பிரண்ட்லி’ ஆதித்யா ரவீந்திரன் இசை அமைக்கிறார். ரேம்மி ஒளிப்பதிவு செய்கிறார்’ என்றார். இப்படத்தை அட்லாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் குமார் தயாரிக்கிறார். திரைக்கதை, வசனம் எழுதி சக்திராஜ் இயக்குகிறார்.
