கொச்சி: தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், மாளவிகா சர்மா (27). வழக்கறிஞரான அவர், தமிழில் சுந்தர்.சி இயக்கிய ‘காபி வித் காதல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ஒரு நிருபர் கேட்ட சர்ச்சைக்குரிய கேள்வி, இணையதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மாளவிகா சர்மா தான் நடித்த ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளாவுக்கு சென்றார். அங்கு சில பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒரு நிருபர், ‘உங்களுக்கு மாட்டுக்கறி சாப்பிட பிடிக்குமா?’ என்று கேட்டார். எதிர்பாராத கேள்வியால் சற்று அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்த மாளவிகா சர்மா, தன்னை அமைதியான மனநிலைக்கு மாற்றிக்கொண்டு, ‘நான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவேன்.
எனவே, இதுவரை நான் மாட்டுக்கறியை சாப்பிட்டது இல்லை’ என்று சொன்னார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் இதுபோன்ற தனிப்பட்ட மற்றும் சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்பது தேவையில்லாதது என்றும், நிருபரின் செயல் அதிருப்தி அளிப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
