Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது பெற்ற தி வைல்ட் கால்

சென்னை: இந்த ஆண்டுக்கான 16வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை ‘தி வைல்ட் கால்’ என்ற படம் பெற்றுள்ளது. இதை ஆட்லர் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. நவீத் எஸ்.ஃபரீத், அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் 12 நிமிடங்கள் ஓடும், 180 டிகிரி கோணத்தில் அமைந்த அனிமேஷன் வனவிலங்கு சாகச படமாக உருவாகியுள்ளது.

இதை ராஜ்கிர் ஜூ சஃபாரி வழங்குகிறார். அனிமேஷன் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் வெங்கி சந்திரசேகர் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். இப்படம் சிங்கம் மற்றும் புலிக்குட்டிகள் இந்தியாவின் பல்லுயிர் பெருக்க மையங்களான இந்திய பெருங்கடல், மேற்குத்தொடர்ச்சி மலைகள், இமயமலை, தார் பாலைவனம் வழியாக பயணிப்பதை பற்றி பின்தொடர்கிறது.

மேலும், இந்திய யானை, பெருங்குருவி உள்பட 23 குறிப்பிடத்தக்க உயிரினங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்கிறது. பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, வாழ்விட பாதுகாப்பு மற்றும் மனித, வனவிலங்கு சக வாழ்வு குறித்த முக்கிய செய்திகளையும் வழங்குகிறது. பாட்னாவின் ஆர்சிசிஎஃப் கோபால் சிங், ஐஎஃப்எஸ் மற்றும் ராஜ்கிர் உயிரியல் பூங்கா சஃபாரியின் இயக்குனர் ராம் சுந்தர் ஆகியோரின் படைப்பு வழிகாட்டுதலுடன் இந்த அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.