Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜெய் படத்தில் பாரதியார் பாடல்

ஜெய் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற படக்குழுவினர், ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில் மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்பாடல் இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்பதை அடிப்படையாக கொண்டு, மதுரை ‘ராப்’ இசைக்குழு மதுரை சோல்ஜர்ஸுடன் இணைந்து, இசை அமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்பாடலை உருவாக்கியுள்ளார்.

சமூக அவலங்களையும், தற்போதைய நிலையையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இப்பாடலை கிரிஷ் கோபாலகிருஷ்ணன், மதுரை சோல்ஜர்ஸ் குழு இணைந்து பாடியுள்ளனர். தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நேரத்தில், சமூக விழிப்புணர்வை தூண்டும் விதமாக இப்பாடல் உருவாகியிருப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.வி புரொடக்‌ஷன் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் இப்படம், இன்றைய சமகால பிரச்னையை அழுத்தமாக பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ளது.

ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், மன் நடித்துள்ளனர். மனித வாழ்க்கையில் நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே மையக்கருத்து. நாட்டில் நடக்கும், இனி நடக்கவிருக்கும் முக்கிய பிரச்னைகளை படம் தைரியமாக பேசும். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.கண்ணன் அரங்கம் அமைக்க, ‘டார்லிங்’ ரிச்சர்ட்சன் எடிட்டிங் செய்துள்ளார். தேர்தல் முடிவுக்கு பிறகு படம் திரைக்கு வருகிறது.